TopicsReady
Kandha Sashti Kavacham with lyrics and meaning
23, Jul, 2024
கந்தர் சஷ்டி கவசம்
Kandar Sashti Kavasam
கந்தர் சஷ்டி கவசம் – குறிப்பு
இயற்றியவர் தேவராய சுவாமிகள்
இயற்றப்பட்ட காலம் 17-ஆம் நூற்றாண்டு
பா வகை நிலைமண்டில ஆசிரியப்பா
காப்பு
பாவகை : நேரிசை வெண்பா
துதிப்போர்க்கு வல்வினைபோம்; துன்பம்போம்; 
நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்தோங்கும் 
நிஷ்டையும்கை கூடும், நிமலரருள் கந்தர் 
சஷ்டி கவசம் தனை. 
பொருள்:
நிமலர் = குற்றமற்றவராகிய சிவபெருமான்
அருள் = பெற்று அருளிய
கந்தர் = முருகக் கடவுளின்
சஷ்டி = சஷ்டி திருநாளில் ஓதுவதற்குத் தகுந்த
கவசம் தனை = கவச மந்திரத்தை
துதிப்போர்க்கு = பக்தியோடு தோத்திரம் செய்பவர்களுக்கு
வல்வினை = வலிமை வாய்ந்த பழைய தீவினைகள் எல்லாம்
போம் = நீங்கிவிடும்;
துன்பம் = துயரங்கள் எல்லாம்
போம் = நீங்கி விடும்
நெஞ்சில் = உள்ளத்தில்
பதிப்போர்க்கு = ‘கந்தர் சஷ்டி கவசம்’ என்னும் மந்திரத்தை ஊன்றிப் பதித்து வைப்பவர்களுக்கு
செல்வம் = வேண்டிய பொருள் செல்வங்கள்
பலித்து = கிடைக்கப்பெற்று
கதித்து ஓங்கும் = அச்செல்வங்கள் அதிகரித்து வளரும்.
நிஷ்டையும் = தவ நிலையும்
கைகூடும் = வாய்க்கும்
விளக்கம்:
கந்தர் சஷ்டி கவசம் என்னும் இந்த நூலை நாள்தோறும் ஓதுபவர்களுக்குக் கிடைக்கும் சித்திகள் நான்கினைக் குறிப்பிடுகிறது இந்தக் காப்புப் பாடல்.
அந்த நான்கு சித்திகளாவன:
1. வல்வினை போகும்
2. துன்பம் போகும்
3, செல்வம் பெருகும்
4. நிஷ்டை கைகூடும்
வல்வினை என்பது ‘வலிமை வாய்ந்த அல்லது விடாமல் பற்றிக்கொள்கின்ற’ வினை என்று பொருள்படும். நம்மை விட்டு நீண்ட காலம் விலகாத வினையைக் கூட விலக்கும் ஆற்றல் வாய்ந்தது கந்தர் சஷ்டி கவசம் என்று இங்குக் குறிப்பிடுகிறார்.
‘துன்பம்’ என்னும் சொல், அன்றாடம் வாழ்வில் நேரும் இடர்ப்பாடுகள் துயரங்கள் போன்றவற்றோடு பிறவியெனும் சுழலில் பிடிபட்டு வருந்துகின்ற துன்பத்தையும் குறிக்கும். அத்தகைய துயரம் யாவையும் நீக்கவல்லது கந்தர் சஷ்டி கவசம் என்பது கருத்து.
செல்வத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது இரண்டு விதமான நன்மைகளைச் சொல்கிறார் : ஒன்று செல்வம் பலித்தல், இரண்டு செல்வம் கதித்து ஓங்குதல். பலித்தல் என்றால் ஆசைப்பட்டது எளிதில் கைவரப்பெறுதல் என்று பொருள். ‘நெருங்கின பொருள் கைப்படவேண்டும்’ என்று பாரதியார் பாடுவதையும் இங்கு நோக்கலாம். கந்தர் சஷ்டி கவசம் என்னும் அருள்பாட்டை நெஞ்சில் பதித்திடும் பக்தர்கள் நினைத்த பொருட்பேறு பெறுவர். மேலும் ‘கதித்து ஓங்கும்’ என்று சொல்வதன் மூலம், அவ்வாறு சேர்ந்த செல்வம் சற்றும் குறையாமல் மேன்மேலும் பெருகி வாழ்வை வளப்படுத்தும் என்கிறார்.
துன்பமும் வினையும் நீங்கிய மனத்தில்தான் இறைச்சிந்தனை நிலைக்கமுடியும். கந்தர் சஷ்டி கவசம் என்னும் இந்த மந்திரத்தைத் துதித்து துன்பமும் வினையும் நீங்கப்பெற்றவர்களுக்கு நிஷ்டை கைகூடும். நிஷ்டை என்ற சொல்லுக்கு ‘யோகத்தில் ஆழ்ந்து இறைவனைத் தனக்குள்ளே காணும்’ நிலை என்று பொருள் கூறலாம். இந்த நிஷ்டையையே பாரதியும் ‘சிவத்திடை நிற்றல்’ என்று குறிப்பிடுவது கருதத்தக்கது.
இந்தப் பாட்டில் குறிப்பிடப்படும் மற்றொரு பொருள் ஆழம் மிகுந்த சொல் ‘பதிப்போர்க்கு’ என்னும் வார்த்தை. ‘பதித்தல்’ என்றால், நிலை நாட்டுதல் அல்லது ஊன்றச் செய்தல் என்று பொருள். அதாவது, கந்தர் சஷ்டி கவசம் என்னும் இந்நூலை வாயால் படிப்பதோடு மட்டுமல்லாமல் நெஞ்சில் பதிக்கவும் செய்யவேண்டும். அப்போது தான் முழுப்பலனும் கிட்டும். ஒரு பாட்டின் அர்த்தத்தை முழுவதும் உணர்ந்தாலொழிய அப்பாட்டை நெஞ்சில் பதிப்பது என்பது இயலாத காரியம். ‘சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்’ சிவனடி அடைவர் என்று மாணிக்கவாசகர் சொல்லியிருப்பதையும் இங்கு நினைவு கூரலாம்.
பாவகை: குறள் வெண்பா
அமரரிடர் தீர அமரம் புரிந்த 
குமரனடி நெஞ்சே குறி. 
பொருள்:
நெஞ்சே = எனது மனமே!
அமரர் = இந்திரன் முதலான தேவர்கள்
இடர் = பட்ட தொல்லைகள்
தீர = நீங்கும்படியாக
அமரம் புரிந்த = சூர பதுமன் முதலான அசுரர்களுடன் போர் செய்து அவர்களைச் சம்ஹாரம் செய்த
குமரன் = முருகக்கடவுளுடைய
அடி = திருவடிகளை
குறி = (நீ தொடங்கிய காரியம் தடங்கலின்றி முடியும் பொருட்டு) தியானித்து வணங்குவாயாக.
நூல்
பாவகை: நிலைமண்டில ஆசிரியப்பா
சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன் (2)
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணி யாட (4)
மையல் நடஞ்செய்யும் மயில்வா கனனார்
கையில்வே லால்எனைக் காக்கவென் றுவந்து (6)
பொருள்
சரவணபவன் = சரவணப் பொய்கையில் தோன்றியவனும்
ஆர் = அன்பு நிறைந்த
சிஷ்டருக்கு = பக்தர்களுக்கு
உதவும் = கருணை காட்டி அருள் புரியும்
செம் கதிர் = சிவந்த ஒளிக்கதிர்களை உடைய
வேலோன் = வேலாயுதத்தை ஏந்தியவனும்
பாதம் இரண்டில் = தன்னுடைய திருப்பாதங்கள் இரண்டிலும்
பல் மணி = பல மணிகளால் ஆன
சதங்கை = சதங்கை என்னும் அணிகலனானது
கீதம் பாட = ராகத்தைப் பாட
கிண்கிணி = கிண்கிணி என்னும் அணியானது
ஆட = அசைந்து ஆட
மையல் = எல்லார் மனத்தையும் கவர்ந்து ஈர்க்கக்கூடிய
நடம் செய்யும் = திருநடனம் புரியும்
மயில்வாகனன் = மயிலை வாகனமாகக் கொண்ட குமரக் கடவுள்
வந்து = என் கண்முன்னே எழுந்தருளி வந்து காட்சி தந்து
கையில் = தன் திருக்கையில்
ஆர் = ஏந்துகின்ற
வேலால் = வேலாயுதத்தால்
என்னை = அடியேனாகிய என்னை
காக்க என்று = (துன்பங்கள் அனைத்தையும் நீக்கி) காப்பாற்றுவான் என்று கருதி
சஷ்டியை = கந்தர் சஷ்டி கவசம் என்னும் திருமந்திரத்தை
நோக்க = மனத்தால் தியானிக்கின்றேன்.
வரவர வேலா யுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக (8)
பொருள்:
வேலாயுதனார் = வேல் ஆயுதத்தை உடைய குமரக்கடவுள்
வர வர = (என்னைக் காத்து அருள் செய்யும் பொருட்டு) வந்தருள்வாராக! வந்தருள்வாராக!!
மயிலோன் = மயிலை வாகனமாகக் கொண்ட முருகக் கடவுள்
வருக வருக வருக வருக = வந்து அருளுக! வந்து அருளுக! வந்து அருளுக! வந்து அருளுக!
இந்திரன் முதலா எண்டிசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக! (10)
பொருள்:
இந்திரன் முதலா = தேவேந்திரன் அதிபதியாக இருக்கும் கிழக்கு திசை உட்பட
எண் திசை = எட்டுத் திசைகளில் உள்ளவர்கள் எல்லாம்
போற்ற = வணங்கும் பெருமையும்
மந்திரம் = மந்திர வலிமையும் உடைய
வடி = கூர்மையான
வேல் = வேலாயுதமானது
வருக வருக = (என்னைக் காத்து அருளும் பொருட்டு) வந்து அருளுக! வந்து அருளுக!
வாசவன் மருகா! வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக (12)
பொருள்:
வாசவன் = தேவேந்திரனின்
மருகா = மருமகனே!
வருக வருக = (என்னைக் காக்க) என்னிடம் வந்து அருள்க! வந்து அருள்க!
நேச = அன்பு மிகுந்த
குறமகள் = குறவர்களிடையே வளர்ந்த வள்ளியம்மையாரின்
நினைவோன் = எண்ணத்தில் என்றும் நிலைத்திருக்கும் பெருமை உடைய கந்தக்கடவுள்
வருக = வந்து அருள்க!
ஆறுமுகம் படைத்த ஐயா! வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக (14)
பொருள்:
ஆறுமுகம் படைத்த = ஆறு திருமுகங்களைக் கொண்ட திருவடிவை உடைய
ஐயா = தலைவனே!
வருக = வந்து அருள்க!
நீறு = திருநீற்றை
இடும் = திருமேனியில் அணிகின்ற
வேலவன் = வேலாயுதபாணியே!
நித்தம் = நாள் தோறும்
வருக = வந்தருளுக!
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக!
சரஹண பவனார் சடுதியில் வருக (16)
பொருள்:
சிரகிரி வேலவன் = சிரகிரியில் (சென்னிமலையில்) எழுந்தருளியுள்ள வேலவனே!
சீக்கிரம் = (தீய சக்திகள் என்னை அழிப்பதற்குச் சூழ்ந்துகொள்ளுமுன்) விரைவாக
வருக = (என்னைக் காப்பதற்கு) வந்து அருள்க!
சரஹண பவனார் = சரவணப் பொய்கையில் உதித்த ஆறுமுகக் கடவுளே
சடுதியில் = சீக்கிரமாக
வருக = வந்து அருள்க!
ரஹண பவச ரரரர ரரர 
ரிஹண பவச ரிரிரிரி ரிரிரி (18) 
விணபவ சரஹ வீரா! நமோநம! 
நிபவ சரஹண நிறநிற நிறென (20) 
வசர ஹணப! வருக! வருக! 
அசுரர் குடிகெடுத்த ஐயா! வருக! (22) 
பொருள்:
(‘ரஹண’ என்றதிலிருந்து ‘விநபவ சரஹண’ என்றது வரையான அட்சரங்களும், ‘நிபவ சரஹண’, ‘வசரவணப’ என்னும் எழுத்துக்களும் திருமந்திர வார்த்தைகள். இவற்றின் பொருளை குருமுகமாக அறியவேண்டும்.)
வீரா = வீரம் மிகுந்தவனே!
நமோநம = உனக்கு நமஸ்காரம்! நமஸ்காரம்!
நிறநிறநிற என = (பகைவர்கள் அஞ்சும் படி) ‘நிற நிற நிற’ என ஓசை உண்டாகுமாறு
வருக வருக = வந்து அருள்க! வந்து அருள்க!
அசுரர் = தேவர்களுக்குத் தொல்லை கொடுத்த சூர பதுமன் முதலான அசுரர்களின்
குடி = குலத்தை
கெடுத்த = அழித்த
ஐயா = ஐயனே!
வருக = வந்து அருள்வாயாக!
என்னை ஆளும் இளையோன் கையில் 
பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும் (24) 
பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க 
விரைந்தெனைக் காக்க வேலோன் வருக! (26) 
பொருள்:
என்னை ஆளும் = என்னை ஆட்கொண்டு அருளும்
இளையோன் = சிவபெருமானின் இளைய குமாரரும்
வேலோன் = வேலாயுதத்தை ஏந்தியவருமாகிய முருகக் கடவுள்
கையில் = தம்முடைய பன்னிரண்டு கைகளிலும்
பன்னிரண்டு ஆயுதம் = பன்னிரண்டு ஆயுதங்களும்
பாச அங்குசமும் = பாசமும் அங்குசமும்
பரந்த = பரந்து விரிந்த திருப்பார்வையை உடைய
பன்னிரண்டு விழிகள் = பன்னிரண்டு திருக்கண்களும்
இலங்க = விளங்க
என்னைக் காக்க = என்னை ரட்சிக்கும் பொருட்டு
விரைந்து = (தீய சக்திகள் என்னை அணுகுமுன்) வேகமாக
வருக = வந்தருள்க!
ஐயும் கிலியும் அடைவுடன் செளவும் 
உய்யொளி சௌவும் உயிரையும் கிலியும் (28) 
கிலியுஞ் சௌவும் கிளரொளி யையும் 
நிலைபெற் றென்முன் நித்தமும் ஒளிரும் (30) 
சண்முகன் றீயும் தனியொளி யொவ்வும் 
குண்டலி யாம்சிவ குகன்தினம் வருக! (32) 
பொருள்:
(ஐயும் கிலியும் செளவும் றீயும் ஒவ்வும் என்பன மந்திர வார்த்தைகள்)
ஐயும் கிலியும் = ஐயும் கிலியும்
அடைவுடன் = முறையுடன்
செளவும் = செளவும்
உய் = நாம் இவ்வுலகில் (வினைகளிலிருந்து) தப்பிப் பிழைப்பதற்கு அருள்செய்யும்
ஒளி = ஒளியுடன் கூடிய
செளவும் = செளவும்
உயிர் = உயிர் காற்றாகிய
ஐயும் கிலியும் கிலியும் செளவும் = ஐயும் கிலியும் கிலியும் செளவும்
கிளர் = பிரகாசிக்கின்ற
ஒளி = ஒளிமயமாகிய
ஐயும் = ஐயும்
நிலைபெற்று = நிலைத்து நிற்குமாறு
என்முன் = எனக்கு முன்
நித்தமும் = நாள் தோறும்
ஒளிரும் = ஒளிவீசுகின்ற திருவுருவை உடைய
சண்முகன் = ஆறுமுகனாகவும்
றீயும் = றீயும்
ஒளி = ஒளியுடன் கூடிய
ஒவ்வும் = ஒவ்வும்
குண்டலி = மூலாதாரமும்
ஆம் = ஆகிய
சிவகுகன் = சிவமைந்தனாகிய குகப்பெருமான்
தினம் = நாள் தோறும்
வரும் = வந்தருள்க!
ஆறு முகமும் அணிமுடி ஆறும் 
நீறிடு நெற்றியில் நீண்ட புருவமும் (34) 
பன்னிரு கண்ணும் பவளச்செவ் வாயும் 
நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும் (36) 
பொருள்:
ஆறுமுகமும் = ஆறு திருமுகங்களும்
அணி = அழகிய
முடி ஆறும் = மகுடங்கள் ஆறும்
நீறு இடும் = திருநீறு அணிந்த
நெற்றியும் = ஆறு திருநெற்றிகளும்
நீண்ட = நீண்டு நெளிந்திருக்கும்
புருவமும் = பன்னிரண்டு புருவங்களும்
பன்னிரு கண்ணும் = பன்னிரண்டு திருக்கண்களும்
பவளச் செவ்வாயும் = பவளம்போல் சிவந்த ஆறு திருவாய்களும்
நல் நெறி = சீரான
நெற்றியில் = ஆறு திருநெற்றிகளிலும்
நவமணிச் சுட்டியும் = ஒன்பது வகை இரத்தினங்கள் பதித்த சுட்டி என்னும் ஆபரணமும்
ஈராறு செவியில் இலகுகுண் டலமும் 
ஆறிரு திண்புயத் தழகிய மார்பில் (38) 
பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து 
நன்மணி பூண்ட நவரத்ன மாலையும் (40) 
பொருள்:
ஈர் ஆறு செவியில் = பன்னிரண்டு திருச்செவிகளிலும்
இலகு = விளங்குகின்ற
குண்டலமும் = குண்டலம் என்னும் காதணியும்
திண் = வலிமை வாய்ந்த
ஆறு இரு புயத்து = பன்னிரண்டு தோள்களிலும்
அழகிய மார்பில் = அழகுபொருந்திய திருமார்பில்
பல் பூஷணமும் = பலவகையான ஆபரணங்களும்
பதக்கமும் = மார்புப் பதக்கமும்
நல் மணி பூண்ட = நல்ல மணிகளைக் கொண்ட
நவரத்ன மாலையும் = நவ ரத்தின மாலையும்
தரித்து = அணிந்து
முப்புரி நூலும் முத்தணி மார்பும் 
செப்பழ குடைய திருவயி றுந்தியும் (42) 
துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும் 
நவரத்னம் பதித்த நற்சீ ராவும் (44) 
இருதொடை யழகும் இணைமுழந் தாளும் 
திருவடி யதனில் சிலம்பொலி முழங்க (46) 
பொருள்:
முப்புரி நூலும் = மூன்று புரிகளைக் கொண்ட பூணூலையும்
முத்து அணி = முத்து மாலையையும் அணிந்த
மார்பும் = திருமார்பும்
செப்பு = புகழத்தக்க
அழகுடைய = வனப்புடைய
திரு = மேன்மையான
வயிறு = வயிறும்
உந்தியும் = கொப்பூழும்
துவண்ட = அசைந்த
மருங்கில் = இடுப்பிலே
சுடர் = சுடர்விட்டு
ஒளி = ஒளிபரப்புகின்ற
பட்டும் = பட்டாடையும்
நவரத்னம் பதித்த = நவ ரத்தினங்கள் பதித்த
நல் சீராவும் = நல்ல போர்க்கவசமும்
ஒருதொடை அழகும் = இரண்டு தொடைகளின் அழகும்
இணை = இரண்டு
முழந்தாளும் = முழங்கால்களும்
ஒலி முழங்க = ஓசை எழுப்ப
திருவடியதனில் = அழகிய திருவடிகளில்
சிலம்பு = கிண்கிணியும்
தரித்து = அணிந்து
செககண செககண செககண செகண 
மொகமொக மொகமொக மொகமொக மொகென (48) 
நகநக நகநக நகநக நகென 
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண (50) 
ரரரர ரரரர ரரரர ரரர 
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி (52) 
டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு 
டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு (54) 
விந்து விந்து மயிலோன் விந்து 
முந்து! முந்து! முருகவேள் முந்து! (56) 
பொருள்:
(‘செககண’ என்பதில் தொடங்கி ‘டிங்குகு’ என்பதுவரை மந்திரச் சொற்கள் அமைந்துள்ளன.)
விந்து விந்து = எல்லாப் பொருள்களுக்கும் முதலான மூலப் பரம்பொருளே! மூலப் பரம்பொருளே!
மயிலோன் = மயில் வாகனத்தைக் கொண்டுள்ள
விந்து = மூலப் பரம்பொருளே!
முருகவேள் = முருகவேளாகிய கடவுளே!
முந்து முந்து முந்து = (என்னைத் தீய சக்திகளிலிருந்து காக்கும் பொருட்டு, அச்சக்திகள் என்னை அழிக்க வருவதற்கு முன்) நீ முன்னதாகப் புறப்பட்டு வருவாயாக!
என்றனை யாளும் ஏரகச் செல்வ!
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும் (58)
பொருள்:
என் தனை ஆளும் = உனது அடியவனாகிய என்னை ஆண்டு அருளும்
ஏரகச் செல்வ = திருவேரகம் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் செல்வனே!
மைந்தன் = உன் மகனாகிய அடியேன்
வேண்டும் = விரும்பிக் கேட்கின்ற
வரம் = வரங்களை
மகிழ்ந்து = சந்தோஷங்கொண்டு
உதவும் = கொடுக்கின்ற
லாலா லாலா லாலா வேசமும் 
லீலா லீலா லீலா வினோதனென்(று) (60) 
உன்திரு வடியை உறுதியென் றெண்ணும் 
என்தலை வைத்துன் இணையடி காக்க! (62) 
பொருள்:
லாலா லாலா லாலா = லாலா லாலா லாலா என்னும் துதி ஒலிகளின்
வேசமும் = பக்திப் பரவச ஓசைகள் ஒலிக்க
லீலா லீலா லீலா = பல்வகைத் திருவிளையாடல்களும் பொருந்திய
விநோதன் = விநோதத்தை உடையவனே!
என்று = என்று கூறித் துதித்து
உன் திருவடியை = உன்னுடைய அழகிய பாதங்கள்
உறுதி என்று = என்னை நிச்சயம் காக்கும் என்று நம்கிக்கையுடன்
எண்ணும் = நினைக்கின்ற
என் தலை = பக்தனாகிய என்னுடைய தலைமேல்
உன் இணை அடி = உன்னுடைய இரண்டு திருவடிகளையும்
வைத்து = வைத்து அருளி
காக்க = என்னைக் காத்து அருள் செய்வாயாக!
என்னுயிர்க் குயிராம் இறைவன்! காக்க!
பன்னிரு விழியால் பாலனைக் காக்க! (64)
பொருள்:
என் உயிர்க்கு உயிராம் = என்னுடைய உயிருக்கு உயிராக இருக்கின்ற
இறைவன் = முருகக்கடவுளே!
காக்க = என்னைக் காத்து அருள் செய்க!
பன்னிரு விழியால் = பன்னிரண்டு திருக்கண்களாலும்
பாலனை = உமது குழந்தையாகிய என்னை
காக்க = காத்து அருள் செய்ய வேண்டுகிறேன்.
அடியேன் வதனம் அழகுவேல் காக்க!
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க! (66)
பொருள்:
அடியேன் = அடியவனாகிய என்னுடைய
வதனம் = முகத்தை
அழகு வேல் = உனது அழகிய வேலானது
காக்க = காத்தருள வேண்டும்
பொடி புனை நெற்றியை = திருநீற்றை அணிகின்ற நெற்றியை
புனித = பரிசுத்தமான
வேல் காக்க = அந்த வேலாயுதமே காத்தருள வேண்டும்
கதிர்வேல் இரண்டு கண்ணினைக் காக்க!
விதிசெவி இரண்டும் வேலவர்! காக்க! (68)
பொருள்:
கதிர் வேல் = ஒளி வீசுகின்ற வேலாயுதமானது
இரண்டு கண்ணினை = எனது இரு கண்களை
காக்க = காத்தருள வேண்டும்
விதி = பிரமனால் படைக்கப்பட்ட
செவி இரண்டும் = இரு செவிகளையும்
வேலவர் = வேலாயுதபாணியே!
காக்க = தாங்கள் காத்தருள வேண்டும்!
நாசிக ளிரண்டும் நல்வேல் காக்க!
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க! (70)
பொருள்:
நாசிகள் இரண்டும் = இரண்டு மூக்குத் துவாரங்களையும்
நல்வேல் = நன்மையைச் செய்யும் வேலானது
காக்க = காத்தருள வேண்டும்
பேசிய = உனது புகழைப் பாடிய
வாய்தனை = எனது வாயை
பெரு வேல் = பெருமை வாய்ந்த வேலானது
காக்க = காத்தருள வேண்டும்!
முப்பத் திருபல் முனைவேல் காக்க!
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க! (72)
பொருள்:
முப்பத்திருபல் = என்னுடைய முப்பத்திரண்டு பற்களையும்
முனை = கூர்மை பொருந்திய
வேல் காக்க = வேலானது காத்தருள வேண்டும்
செப்பிய = உனது தோத்திரங்களைச் சொல்லிய
நாவை = நாக்கை
செவ்வேல் = செம்மை கொண்ட வேலானது
காக்க = காத்தருள வேண்டும்
கன்ன மிரண்டும் கதிர்வேல் காக்க!
என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க! (74)
பொருள்:
கன்னம் இரண்டும் = கன்னங்கள் இரண்டையும்
கதிர் வேல் = ஒளிவீசும் வேலானது
காக்க = காத்தருள வேண்டும்
என் இளங்கழுத்தை = எனது இளமையான கழுத்தை
இனிய = பக்தர்களுக்கு இனிமையான
வேல் காக்க = வேலானது காத்தருள வேண்டும்
மார்பை இரத்ன வடிவேல் காக்க!
சேரிள முலைமார் திருவேல் காக்க! (76)
பொருள்:
மார்பை = மார்பை
இரத்ன = இரத்னங்கள் பதித்த
வடி = கூர்மையான
வேல் காக்க = வேலானது காத்தருள வேண்டும்
சேர் = மார்போடு சேர்ந்துள்ள
இளமுலைமார் = இளமுலைகளை
திரு = அழகிய
வேல் காக்க = வேலானது காத்தருள வேண்டும்
வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க!
பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க! (78)
பொருள்:
வடி வேல் = வடித்தெடுக்கப்பட்ட வேலானது
இரு தோள் = இரண்டு தோள்களையும்
வளம் பெற = சிறப்படையும் படி
காக்க = காத்தருள வேண்டும்
பிடரிகள் இரண்டும் = இரண்டு பிடரிகளையும்
பெரு வேல் = பெருமை வாய்ந்த வேலாயுதமானது
காக்க = காத்தருள வேண்டும்
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க!
பழுபதி னாறும் பருவேல் காக்க! (80)
பொருள்:
முதுகை = முதுகுப் புறத்தினை
அழகுடன் = சிறப்பாக
அருள் வேல் = கருணை பொருந்திய வேலானது
காக்க = காத்தருள வேண்டும்
பழு = விலா எலும்புகள்
பதினாறும் = பதினாறினையும்
பரு வேல் = பெரிய வேல்
காக்க = காத்தருள வேண்டும்
வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க!
சிற்றிடை யழகுறச் செவ்வேல் காக்க! (82)
பொருள்:
வெற்றி வேல் = வெற்றியையுடைய வேலாயுதமானது
வயிற்றை விளங்க = சிறப்புற விளங்குமாறு வயிற்றை
காக்க = காத்தருள வேண்டும்
சிறு இடை = சிறிய இடையை
அழகு உற = அழகு சேர
செவ்வேல் = செம்மை கொண்ட வேல்
காக்க = காத்தருள வேண்டும்
நாணாங் கயிற்றை நல்வேல் காக்க!
ஆண்குறி இரண்டும் அயில்வேல் காக்க! (84)
பொருள்:
நாண் ஆம் கயிற்றை = நரம்பாகிய கயிற்றை
நல் வேல் = நன்மையை அருளும் வேலானது
காக்க = காத்தருள வேண்டும்
ஆண்குறி இரண்டும் = பீஜங்கள் இரண்டையும்
அயில் வேல் = கூர்மையாகிய வேலானது
காக்க = காத்தருள வேண்டும்
பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க!
வட்டக் குதத்தை வடிவேல் காக்க! (86)
பொருள்:
பிட்டம் இரண்டும் = இரண்டு ஆசன பக்கங்களையும்
பெரு வேல் = பெருமை வாய்ந்த வேலானது
காக்க = காத்தருள வேண்டும்!
வட்ட = வட்ட வடிவத்துடன் கூடிய
குதத்தை = ஆசன துவாரத்தை
வல் வேல் = வலிமை பொருந்திய வேலானது
காக்க = காத்தருள வேண்டும்!
பணைத்தொடை இரண்டும் பருவேல் காக்க!
கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க! (88)
பொருள்:
பணை = திரண்ட
தொடை இரண்டும் = இரண்டு தொடைகளையும்
பரு வேல் = வலிமை வாய்ந்த வேல்
காக்க = காத்தருள வேண்டும்
கணைக்கால் = இரண்டு கணைக்கால்களையும்
முழந்தாள் = இரண்டு முழந்தாள்களையும்
கதிர் = ஒளி பொருந்திய
வேல் = வேலாயுதமானது
காக்க = காத்தருள வேண்டும்!
ஐவிரல் அடியிணை அருள்வேல் காக்க!
கைக ளிரண்டும் கருணைவேல் காக்க! (90)
பொருள்:
ஐவிரல் = ஐந்து விரல்களைக் கொண்ட
அடி இணை = இரண்டு பாதங்களையும்
அருள் வேல் = கருணை உடைய வேல்
காக்க = காத்தருள வேண்டும்!
கைகள் இரண்டும் = இரண்டு கைகளையும்
கருணை வேல் = அருள் மிக்க வேலாயுதமானது
காக்க = காத்தருள வேண்டும்!
முன்கை யிரண்டும் முரண்வேல் காக்க!
பின்கை யிரண்டும் பின்னவள் இருக்க! (92)
பொருள்:
முன்கை இரண்டும் = இரண்டு முன்னங்கைகளையும்
முரண் வேல் = வலிமை பொருந்திய வேலானது
காக்க = காத்தருள வேண்டும்
பின்கை இரண்டும் = இரண்டு பின்னங்கைகளிலும்
பின்னவள் = திருமகள்
இருக்க = வாசம் செய்யுமாறு அருள வேண்டும்
நாவில் சரஸ்வதி நற்றுணை யாக!
நாபிக் கமலம் நல்வேல் காக்க! (94)
பொருள்:
நாவில் = நாக்கில்
சரஸ்வதி = கலைமகள்
நல் துணை ஆக = நல்ல துணை ஆக இருக்க அருள் செய்ய வேண்டும்
நாபிக் கமலம் = உந்தித் தாமரையை
நல் வேல் = நன்மை அருளும் வேலானது
காக்க = காத்தருள வேண்டும்!
முப்பால் நாடியை முனைவேல் காக்க!
எப்பொழு தும்எனை எதிர்வேல் காக்க! (96)
பொருள்:
முப்பால் நாடியை = மூன்று பிரிவான நாடிகளை
முனை வேல் = கூர்மை பொருந்திய வேலானது
காக்க = காத்தருள வேண்டும்
எனை எப்பொழுதும் = அடியேனாகிய என்னை எந்தக் காலத்திலும்
எதிர் வேல் = பகைவர்களை எதிர்த்து நின்று போரிடும் வேலானது
காக்க = காத்தருள வேண்டும்
அடியேன் வசனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க! (98)
பொருள்:
அடியேன் வசனம் = எனது வார்த்தையானது
அசைவு உள நேரம் = (என்னைக் காத்தருள் என்று வேண்டி) நாக்கு அசைய வெளிப்படும் போது
கனக வேல் = பொன்னாலான வேலானது
கடுக வந்து = விரைந்து வந்து
காக்க = காத்தருள வேண்டும்
வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க
அரையிருள் தன்னில் அனையவேல் காக்க (100)
பொருள்:
வரும் பகல் தன்னில் = இருள் நீங்கிப் பகல் நேரம் வரும் போதெல்லாம்
வச்சிர வேல் = வைர வேலானது
காக்க = காத்தருள வேண்டும்
அரை இருள் தன்னில் = பாதி இராத்திரியில்
அனைய வேல் = அத்தகைய வைரம் பாய்ந்த வேலானது
காக்க = காத்தருள வேண்டும்
ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க!
தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க! (102)
பொருள்:
ஏமத்தில் = முன்னிரவு நேரத்திலும்
சாமத்தில் = நடுராத்திரி நேரத்திலும்
எதிர் வேல் = பகைவர்களை எதிர்த்து நின்று போரிடும் வேலானது
காக்க = காத்தருள வேண்டும்!
தாமதம் நீக்கி = தாமதத்தை அகற்றி
சதுர் வேல் = அறிவு சிறந்த வேலானது
காக்க = காத்தருள வேண்டும்!
காக்க காக்க கனகவேல் காக்க!
நோக்க நோக்க நொடியில் நோக்க! (104)
பொருள்:
நொடியில் = ஒரு இமைப்பொழுதில்
கனக வேல் = பொன்னாலான வேலானது
காக்க காக்க காக்க = காத்தருள வேண்டும்! காத்தருள வேண்டும்! காத்தருள வேண்டும்!
நோக்க நோக்க நோக்க = நோக்கி அருள் செய்ய வேண்டும்! நோக்கி அருள் செய்ய வேண்டும்! நோக்கி அருள் செய்ய வேண்டும்!
தாக்க தாக்க தடையறக் தாக்க!
பார்க்க! பார்க்க! பாவம் பொடிபட (106)
பொருள்:
பாவம் = அடியேனின் பாவங்கள்
பொடி பட = தூளாகி ஒழிய
பார்க்க பார்க்க = நோக்கி அருள் செய்ய வேண்டும்! நோக்கி அருள் செய்ய வேண்டும்!
தடை அற = தடை இன்றி
தாக்க தாக்க தாக்க = (பாவங்களையெல்லாம்) அடித்து விலக்கி அருள் செய்ய வேண்டும்! அடித்து விலக்கி அருள் செய்ய வேண்டும்! அடித்து விலக்கி அருள் செய்ய வேண்டும்!
பில்லி சூனியம் பெரும்பகை அகல
வல்ல பூதம், வலாட்டிகப் பேய்கள், (108)
அல்லற் படுத்தும் அடங்கா முனியும்,
பிள்ளைகள் தின்னும் புழைக்கடை முனியும், (110)
கொள்ளிவாய்ப் பேய்களும், குறளைப் பேய்களும்,
பெண்களைத் தொடரும் பிரமராட் சதரும் (112)
அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட
இரிசிகாட் டேரி இத்துன்ப சேனையும் (114)
பொருள்:
பில்லி சூனியம் = எதிரிகள் ஏவுகின்ற பில்லிப் பேயும் சூனியமும்
பெரும் பகை = பெரிய பகைவர்களும்
அடியனைக் கண்டால் = (வேலினை வணங்குகின்ற) என்னைப் பார்த்தவுடன்
அகல = (என் முன் நிற்காமல்) நீங்கி ஓடவும்
வல்ல பூதம் = வலிமை வாய்ந்த பூகங்களும்
வலாஷ்டிகப் பேய்கள் = வல்லமை உடைய பிசாசுகளும்
அல்லல் படுத்தும் = துன்பப்படுத்துகின்ற
அடங்கா முனியும் = மந்திர தந்திரங்கள் எதற்கும் கட்டுப்படாத முனிகளும்
பிள்ளைகள் தின்னும் = பிள்ளைகளைப் பிடித்து உணவாகக் கொள்கின்ற
புழைக்கடை முனியும் = புறவாசல் முனியும்
கொள்ளி வாய் பேய்களும் = நெருப்பை வாயிலே கொண்டிருக்கும் பிசாசுகளும்
குறளைப் பேய்களும் = குட்டிப் பிசாசுகளும்
பெண்களைத் தொடரும் = பெண்களின் பின்னால் தொடர்ந்து வந்து தொல்லை கொடுக்கும்
பிரம ராக்‌ஷதரும் = பிரம்ம ராக்‌ஷசப் பேய்களும்
இரிசி = இரிசி என்ற ஒருவகைப் பெண் பேயும்
காட்டேரி = காட்டேரி என்ற துஷ்ட தேவதையும்
இத்துன்ப சேனையும் = மேற்கூறியவாறு துன்பத்தை உண்டாக்கும் பேய்ப்படைகளும்
அடியனைக் கண்டால் = அடியேனைப் பார்த்தவுடன்
அலறிக் கலங்கிட = அலறிக்கொண்டு கலங்கி ஓடவும்
எல்லிலும் இருட்டிலும் எதிர்படும் அண்ணரும்,
கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும், (116)
விட்டாங் காரரும், மிகுபல பேய்களும்,
தண்டியக் காரரும், சண்டா ளங்களும் (118)
என்பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட
ஆனை யடியினில் அரும்பா வைகளும் (120)
பொருள்:
எல்லினும் = பகலிலும்
இருட்டிலும் = இரவிலும்
எதிர்படும் = எதிர்த்து வருகின்ற
அண்ணரும் = அண்ணர் என்ற தேவதைகளும்
கனம் = மிகுந்த
பூசை கொள்ளும் = பூஜைகளைப் பெற்றடையும்
காளியோடு = காளி தேவதையோடு
அனைவரும் = காளியைச் சேர்ந்த படைகளாகிய மற்ற தேவர்களும்
விட்டாங்காரரும் = விட்டாங்காரர் என்னும் ஒருவகைப் பூதங்களும்
மிகு பல பேய்களும் = இன்னும் மிகுந்த பலமுடைய பேய்களும்
தண்டியக்காரரும் = பல்லக்கில் வரும் பூதங்களும்
சண்டாளங்களும் = கீழ்த்தரமான பல செய்கைகளைச் செய்யும் பேய்களும்
ஆனை = யானையின்
அடியினில் = பாதத்திற்குக் கீழ் பூமியில் புதைக்கப்பட்ட
அரும் பாவைகளும் = (கண்ணில் தென்படுவதற்குக் கடினமான) பதுமைகளும்
என்பெயர் சொல்லவும் = முருகப்பெருமானின் அடியவனாகிய எனது பெயரைச் சொன்னவுடன்
இடி விழுந்து ஓடிட = பயந்து ஓடவும்
பூனை மயிரும், பிள்ளைகள் என்பும்,
நகமும் மயிரும் நீள்முடி மண்டையும், (122)
பாவைக ளுடனே பலகல சத்துடன்
மனையிற் புதைத்த வஞ்சனை தனையும், (124)
ஒட்டியச் செருக்கும், ஒட்டியப் பாவையும்,
காசும் பணமும் காவுடன் சோறும், (126)
ஓதும்அஞ் சனமும், ஒருவழிப் போக்கும்,
அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட (128)
பொருள்:
பூனை மயிரும் = பூனையினுடைய ரோமமும்,
பிள்ளைகள் என்பும் = பிள்ளைகள் எலும்பும்,
நகமும் = நகங்களும்
மயிரும் = ரோமமும்
நீள் முடி = நீண்ட முடியை உடைய
மண்டையும் = தலையும்
பாவைகளுடனே = மரப்பதுமைகளும்
பல கலசத்துடன் = பலவிதமான மண்ணால் செய்யப்பட்ட கலசங்களும்
மனையில் புதைத்த = (எனக்குத் தீங்கு விளைவிக்கும் பொருட்டு) என் வீட்டில் புதைத்துவைத்த
வஞ்சனை தனையும் = மந்திர தந்திர மாயங்களும்
ஒட்டியச் செருக்கும் = மாந்திரீகம் அறிந்த எனது பகைவர்களின் கர்வமும்
ஒட்டியப் பாவையும் = மந்திரித்துச் செய்த மரப்பதுமையும்,
காசும் பணமும் = தீய சக்திகளுக்குத் தட்சணையாகக் கொடுக்கும் ரத்தினங்களும் நாணயங்களும்
காவுடன் = ஆடு கோழி காவுடன்
சோறும் = உதிரத்தில் புரட்டிய சோறும்
ஓதும் = சொல்லுகின்ற
அஞ்சனமும் = எதிரிகள் கற்ற அஞ்சன வித்தையும்
ஒருவழிப் போக்கும் = பித்துப்பிடித்து ஒரே வழியாகப் போகச் செய்யும் மாய மந்திரமும்,
அடியனைக் கண்டால் = அடியேனைப் பார்த்தவுடனே
அலைந்து = வருந்தி
குலைந்திட = அழியவும்
மாற்றான் வஞ்சகர் வந்து வணங்கிட
காலதூ தாளெனைக் கண்டாற் கலங்கிட (130)
அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட
வாய்விட் டலறி மதிகெட் டோட (132)
படியினில் முட்டப் பாசக் கயிற்றால்
கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு! (134)
பொருள்:
மாற்றான் வஞ்சகர் = பகைவர்களும் வஞ்சகர்களும்
வந்து வணங்கிட = வந்து என்னிடம் அடிபணியவும்
கால தூதாள் = எமனுடைய தூதர்கள்
என்னைக் கண்டால் கலங்கிட = என்னைக் கண்டால் மனம் கலங்கவும்
அஞ்சி நடுங்கிட = வேலவனின் நாமத்தைக் கேட்டு பயந்து நடுநடுங்கவும்
அரண்டு = அந்தப் பயத்தின் காரணமாக வெருண்டு
புரண்டிட = கீழே விழுந்து புரளவும்
வாய்விட்டு அலறி = வாயைத் திறந்து கதறி
மதி கெட்டு = புத்தி கெட்டு
ஓட = ஓடவும்
படியினில் = பூமியில்
முட்ட = முட்டிக்கொள்ளவும்
பாசக் கயிற்றால் = பாசக்கயிற்றினாலே
கட்டு = கட்டியருளுக!
உடன் அங்கம் கதறிட கட்டு = உடனே உடல் பகுதிகள் அனைத்தும் கதறும்படிக்கு கட்டி அருள்வாயாக!
கட்டி உருட்டு கால்கை முறிய
கட்டு! கட்டு! கதறிடக் கட்டு! (136)
பொருள்:
கட்டி = அவ்வாறு கட்டப்பட்ட அந்தப் பகைவர்களை
உருட்டு = கீழே உருட்டுவாயாக!
கால் கை முறிய = காலும் கையும் ஒடியவும்
கதறிட = அவர்கள் கதறும்படியாகவும்
கட்டு கட்டு கட்டு = பாசக்கயிற்றால் கட்டியருள்வாய்! கட்டியருள்வாய்! கட்டியருள்வாய்!
முட்டு! முட்டு! முழிகள் பிதுங்கிட
செக்கு! செக்கு! செதில்செதி லாக (138)
பொருள்:
முழிகள் பிதுங்கிட = கண்விழிகள் வெளியே பிதுங்கி வந்து வருத்த
முட்டு முட்டு = மோதுவாய்! மோதுவாய்!
செதில் செதிலாக = தேகங்கள் பட்டை பட்டையாய் உதிரும்படி
செக்கு செக்கு = அழிப்பாய்! அழிப்பாய்!
சொக்கு! சொக்கு! சூர்ப்பகைச் சொக்கு!
குத்து! குத்து! கூர்வடி வேலால் (140)
பொருள்:
சொக்கு சொக்கு = அழகனே! அழகனே!
சூர்ப்பகை = சூரர்களுக்குப் பகையாகி அவர்களை அழித்த
சொக்கு = அழகனே!
கூர் வடி வேலால் = கூரிய வடித்தெடுத்த வேலால்
குத்து குத்து = குத்தி அழிப்பாய்! குத்தி அழிப்பாய்!
பற்று! பற்று! பகலவன் தணலெரி!
தணலெரி! தணலெரி! தணலது வாக (142)
பொருள்:
பற்று பற்று = பற்றிடுவாய்! பற்றிடுவாய்!
பகலவன் = சூரியனிடதேயுள்ள
தணல் அதுவாக = தழலின் ரூபம் ஆகும்படி
தணல் எரி = கொளுந்துவிட்டு எரிப்பாய்!
தணல் எரி = கொளுந்துவிட்டு எரிப்பாய்!
தணல் எரி = கொளுந்துவிட்டு எரிப்பாய்!
விடு!விடு! வேலை வெகுண்டது வோட
புலியும் நரியும் புன்னரி நாயும் (144)
எலியும் கரடியும் இனித்தொடர்ந் தோட
தேளும் பாம்பும் செய்யான் பூரான் (146)
கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம்
ஏறிய விஷங்கள் எளிதுடன் இறங்க (148)
பொருள்:
புலியும் = என்னைத் தாக்க வந்த புலியும்
வெருண்டது ஓட = அஞ்சி ஓடவும்
நரியும் = பெரிய நரியும்
புல் நரியும் = சிறு நரியும்
நாயும் = நாய்களும்
எலியும் = எலிகளும்
கரடியும் = கரடியும்
இனி = இனிமேல்
தொடர்ந்து = பயத்தால் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்து
ஓட = ஓடவும்
தேளும் பாம்பும் = தேள்களும் பாம்பும்
செய்யான் = பூரான்களும்
கடிவு இட விஷங்கள் = கடித்த இடத்தில் தங்கிய விஷங்களும்
கடித்து உயர் அங்கம் ஏறிய விஷங்கள் = நச்சுப்பற்கள் கடித்துத் தலைவரை ஏறிய விஷங்களும்
எளிது உடன் இறங்க = எளிதாக சீக்கிரத்தில் இறங்கி விடவும்
வேலை = வேலாயுதத்தை
விடு விடு = ஏவி விடுவாயாக!
ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும் 
வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம் (150) 
சூலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு 
குடைச்சல் சிலந்தி குடல்விப் பிருதி (152) 
பக்கப் பிளவை படர்தொடை வாழை 
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி (154) 
பற்குத் தரணை பருஅரை யாப்பும் 
எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால் (156) 
நில்லா தோட நீஎனக் கருள்வாய் 
ஈரேழ் உலகமும் எனக்குற வாக (158) 
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா 
மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும் (160) 
பொருள்:
ஒளிப்பும் = உரு மறைவும்
சுளுக்கும் = நரம்பு சுளுக்குதலும்
ஒருதலை நோயும் = ஒருபக்கத் தலைவலியும்
வாதம் = வாயுசம்பந்தமான வியாதியும்
சயித்தியம் = குளிர்நோயும்
வலிப்பு = இழுப்புநோயும்
பித்தம் = பித்தநோயும்
சூலை = சூலைநோயும்
சயம் = க்‌ஷயரோகமும்
குன்மம் = குன்மநோயும்
சொக்கு = சோர்வை உண்டாக்கும்
சிரங்கு = சிரங்குரோகமும்
குடைச்சல் = கைகால் குடைச்சலும்
சிலந்தி = சிலந்திக்கட்டியும்
குடல் விப்புருதி = குடலில் உண்டாகும் சிலந்திக்கட்டியும்
பக்கப்பிளவை = விலாப்புறங்களில் தோன்றும் பிளவையும்
படர் = பரவுகின்ற
தொடை வாழை = தொடைவாழை என்று சொல்லப்படும் கட்டியும்
கடுவன் = கடுவனும்
படுவன் = படுவன் என்னும் சிலந்தியும்
கைத்தாள் சிலந்தி = கைகால் சிலந்தியும்
பல் குத்து = பல் குத்து வலியும்
அரணை = பல் அரணையும்
பரு = பருக்கட்டிகளும்
அரையாப்பு = அரையாப்புக் கட்டியும்
எல்லாப் பிணியும் = மேற்கூறிய எல்லா வியாதிகளும்
என்றனைக் கண்டால் = என்னைக் கண்டவுடன்
நில்லாது = என்னிடத்தில் தங்கி இருக்காமல்
ஓட = நீங்கி ஒழிய
நீ = ஓ முருகக்கடவுளே! நீங்கள்
எனக்கு = அடியேனாகிய எனக்கு
அருள்வாய் = கருணை புரிவீராக!
ஈரேழு உலகமும் = பதினான்கு லோகங்களும்
எனக்கு = அடியேனாகிய என்னுடன்
உறவு ஆக = நட்புடன் இருக்க
ஆணும் பெண்ணும் = ஆண்களும் பெண்களும்
அனைவரும் = எல்லோரும்
மண் ஆள் = பூமியை ஆள்கின்ற
அரசரும் = மன்னர்களும்
எனக்காக மகிழ்ந்து = என் பொருட்டு சந்தோஷம் அடைந்து
உறவாகவும் = என்னுடன் தோழமை கொண்டிருக்கவும்
நீ = முருகக்கடவுளே! நீங்கள்
எனக்கு = அடியேனாகிய எனக்கு
அருள்வாய் = கருணை செய்வீராக!
உன்னைத் துதிக்க உன்திரு நாமம்
சரஹண பவனே! சைலொளி பவனே! (162)
திரிபுர பவனே! திகழொளி பவனே!
பரிபுர பவனே! பவமொளி பவனே! (164)
அரிதிரு மருகா! அமரா வதியைக்
காத்துத் தேவர்கள் கடும்சிறை விடுத்தாய்! (166)
பொருள்:
சரஹண பவனே = சரவணப் பொய்கையில் உதித்தவனே!
சைல் = மலைகளில் வீற்றிருக்கும்
ஒளி பவனே = ஒளிமயமான கடவுளே!
திரிபுர பவனே = திரிபுரத்தை அழித்த சிவபெருமானை ஒத்தவனே!
திகழ் = மின்னுகின்ற
ஒளி = ஒளியினை உடைய
பவனே = கடவுளே!
பரிபுர பவனே = பாதச் சிலம்பை அணிந்த மேன்மை உடையவனே!
பவம் = பிறவிப் பெருந்துயரை
ஒளி = தடுக்கின்ற
பவனே = சக்தியை உடையவனே!
அரி = திருமாலுக்கும்
திரு = மகாலட்சுமிக்கும்
மருகா = மருமகனே!
உன்னை = உன்னையும்
உன் திரு நாமம் = உன்னுடைய அழகிய திருநாமத்தையும்
துதிக்க = துதிசெய்த தேவர்களின்
அமராபதியை = தேவலோகத்தை
காத்து = ரட்சித்து
தேவர் = அமரர்களுடைய
கடும் சிறை = கடுமையான சிறைவாசத்தை
விடுத்தாய் = நீக்கி அவர்களை அச்சிறையிலிருந்து விடுதலை செய்தவனே!
கந்தா! குகனே! கதிர்வே லவனே!
கார்த்திகை மைந்தா! கடம்பா! கடம்பனை (168)
இடும்பனை யழித்த இனியவேல் முருகா!
தணிகா சலனே! சங்கரன் புதல்வா! (170)
பொருள்:
கந்தா குகனே = கந்தக் கடவுளே! குகப்பெருமானே
கதிர் = ஒளிபொருந்திய
வேலவனே = வேற்படையை ஏந்தியவனே
கார்த்திகை மைந்தா = கார்த்திகை முதலிய நட்சத்திர மாதர்கள் வளர்த்த புத்திரனே
கடம்பா = கடப்பமலர் மாலையைத் தாங்கியவனே!
கடம்பனை இடும்பனை = கடம்பனையும் இடும்பனையும்
அழித்த = சம்ஹாரம் செய்த
இனிய வேல் முருகா = இன்பம் தருகின்ற வேலை ஏந்திய முருகப்பெருமானே!
தணிகாசலனே = திருத்தணிகை மலையில் எழுந்தருளி இருப்பவனே!
சங்கரன் புதல்வா = சிவபெருமானின் செல்வனே!
கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா!
பழநிப் பதிவாழ் பால குமாரா! (172)
பொருள்:
கதிர்காமத்து உறை = கதிர்காமம் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி இருக்கின்ற
கதிர் வேல் முருகா = ஒளி வீசும் வேலை ஏந்திய முருகப்பெருமானே!
பழனிப் பதி வாழ் = பழனி என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி இருக்கின்ற
பால குமாரா! = பாலகனாகிய குமரக்கடவுளே!
ஆவினன் குடிவாழ் அழகிய வேலா!
செந்தின்மா மலையுறும் செங்கல்வ ராயா! (174)
பொருள்:
ஆவினன்குடி = திருவாவினன்குடி என்னும் திருத்தலத்தில்
வாழ் = வீற்றிருக்கின்ற
அழகிய வேலா = அழகிய வேலாயுதத்தை ஏந்தியவனே!
செந்தில் = திருச்செந்தூர் என்னும் திருத்தலத்தில் உள்ள
மா மலை உறும் = சிறப்புடைய மலையில் எழுந்தருளி இருக்கும்
செங்கல்வராயா = செங்கல்வராயனே!
சமரா புரிவாழ் சண்முகத் தரசே!
காரார் குழலாள் கலைமகள் நன்றாய் (176)
என்நா இருக்க யானுனைப் பாட
எனைத்தொடர்ந் திருக்கும் எந்தை முருகனை (178)
பொருள்:
சமராபுரி = சமராபுரி என்னும் திருத்தலத்தில்
வாழ் = எழுந்தருளி இருக்கின்ற
சண்முகத்து அரசே = சண்முகன் என்னும் திருநாமத்தைக் கொண்டு என்னை ஆள்பவனே!
கார் ஆர் = மேகத்தை ஒத்த
குழலாள் = கூந்தலை உடைய
கலைமகள் = சரசுவதியானவள்
நன்றாய் = ஞானம் சிறக்குமாறு
என் நா = எனது நாவில்
இருக்க = வீற்றிருக்க
யான் உனைப் பாட = அடியேன் உன் புகழைப் பாட
எனைத் தொடர்ந்து இருக்கும் = என்னைத் தொடர்ந்து வந்து எனக்குப் பக்கத்துணையாக நிற்கும்
எந்தை = என் தந்தையாகிய
முருகனை = முருகக் கடவுளே!
பாடினேன் ஆடினேன் பரவச மாக
ஆடினேன் நாடினென் ஆவினன் பூதியை (180)
நேச முடன்யான் நெற்றியில் அணிய
பாச வினைகள் பற்றது நீங்கி (182)
பொருள்:
பாடினேன் = உன் புகழைப் பாடினேன்;
பரவசமாக = மிகுந்த களிப்போடு என்னை மறந்து
ஆடினேன் = ஆனந்தக் கூத்து ஆடினேன்;
ஆடினேன் ஆடினேன் ஆடினேன் = தொடர்ந்து ஆடிக்கொண்டே இருந்தேன்;
பாச = மாயமும் பற்றும் நிறைந்த
வினைகள் = செயல்களின்
பற்றது = தொடர்ச்சி
நீங்கி = விலகுமாறு
நேசமுடன் = அன்போடு
யான் = அடியேன்
ஆவினன் = சிவபெருமானின்
பூதியை = விபூதியை
நெற்றியில் அணிய = நெற்றியில் அணிந்துகொண்டு
உன்பதம் பெறவே உன்னரு ளாக
அன்புடன் இரக்‌ஷி! அன்னமுஞ் சொன்னமும் (184)
மெத்தமெத் தாக வேலா யுதனார்
சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க! (186)
பொருள்:
உன் பதம் = தங்கள் திருவடியை
பெறவே = சரண் புகுந்து தஞ்சம் அடைய
உன் அருள் = உன்னுடைய கருணையானது
ஆக = என்மீது உண்டாகவும்,
அன்னமும் = சோறும்
சொன்னமும் = பொன்னும்
மெத்த மெத்த = மிக மிக
ஆக = பெருகவும்,
அன்புடன் = பிரியத்தோடு
இரக்‌ஷி = அருள் செய்து காப்பீராக!
சித்தி பெற்று = விரும்பிய பொருள்கள் கைவரப் பெற்று
சிறப்புடன் = வளமுடன்
வாழ்க = வாழ்வேனாக!
வாழ்க! வாழ்க! மயிலோன்! வாழ்க!
வாழ்க! வாழ்க! வடிவேல் வாழ்க! (188)
பொருள்:
மயிலோன் = மயில் வாகனத்தை உடைய முருகக்கடவுளே
வாழ்க = தங்கள் அருள் என்றும் இந்தப் பூமியில் வாழ்ந்திருப்பதாக!
வாழ்க வாழ்க = தங்கள் அருள் வாழ்க! தங்கள் அருள் வாழ்க!
வடிவேல் = தங்கள் திருக்கரத்தில் ஏந்தியுள்ள கூர்மையான வேலின் சக்தி
வாழ்க = இந்த பூலோகத்தில் எல்லாரையும் காத்திட எங்கெங்கும் நிறைந்து வாழ்வதாக!
வாழ்க வாழ்க = வேலின் சக்தி என்றென்றும் வாழ்வதாக!
வாழ்க! வாழ்க! மலைக்குரு வாழ்க!
வாழ்க! வாழ்க! மலைக்குற மகளுடன்! (190)
பொருள்:
மலை = மலைகளில் விரும்பி வசிக்கின்ற
குரு = எமது குருவாகிய முருகப்பிரானுடைய
வாழ்க வாழ்க வாழ்க = அருள் வாழ்வதாக!
மலை = மலைநாட்டில் வளர்ந்த
குறமகளுடன் = வள்ளியம்மையாரோடு பக்தர்களுக்குக் காட்சியளிக்கும்
வாழ்க வாழ்க = உமது அருள் வாழ்வதாக!
வாழ்க! வாழ்க! வாரணத் துவசம்,
வாழ்க! வாழ்க!என் வறுமைகள் நீங்க (192)
பொருள்:
வாரண = சேவலாகிய
துவசம் = உமது கொடியின்
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க = புகழ் வாழ்க!
என் வறுமை நீங்க = (உமது கொடியைத் தியானிக்கும்) எனது வறுமை தொலைவதாக!
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை அடியேன் எத்தனை செய்தால் (194)
பெற்றவன் நீகுரு பொறுப்ப(து) உன்கடன்
பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே (196)
பொருள்:
பெற்றவன் = என்னைப் பெற்ற தந்தை
நீ = முருகப்பிரானே! நீயே ஆகும்;
குரு நீ = எனக்கு ஆசானும் நீயே;
குறமகள் = உமது மனையாளாகிய குறவர் குடியில் வளர்ந்த வள்ளியம்மை
பெற்றவள் = இந்த உலகத்தோர் அனைவரையும் பெற்றெடுத்த தாய் ஆகையால்
பெற்றவள் ஆம் = என்னையும் பெற்ற அன்னையாவாள் (அதனால்)
அடியேன் = உமது அடியவனாகிய நான்
எத்தனை = எவ்வளவு
குறைகள் = குற்றமுள்ள செய்கைகளை
எத்தனை பிழைகள் = எவ்வளவு பிழையான செயல்களை
எத்தனை எத்தனை = எவ்வளவு எவ்வளவு
செய்தால் = செய்தாலும்
பொறுப்பது = அவற்றைப் பொறுத்துக் கொண்டு அருளுவது
உன் கடன் = உமது கடமையாகும்;
பிள்ளையென் றன்பாய்ப் பிரிய மளித்து
மைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித் (198)
தஞ்சமென் றடியர் தழைத்திட அருள்செய்
கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய (200)
பொருள்:
பிள்ளை என்று = நான் உமக்குப் பிள்ளை என்று
அன்பாய் = அன்போடு
மைந்தன் என் மீது = மகனாகிய என்மேல்
உன் மனம் = உமது திருவுள்ளம்
மகிழ்ந்து அருளி = மகிழ்ச்சி கொண்டு
பிரியம் = அடியேன் வேண்டி விரும்பிக் கேட்பனவற்றை
அளித்து = அடியேனுக்குக் கொடுத்து கருணை காட்டி
கந்தா = கந்தக் கடவுளாகிய உன்
சஷ்டி கவசம் = சஷ்டி கவசத்தை
விரும்பிய = விரும்பிப் படித்தவர்களுக்கும்
தஞ்சம் என்று = நீயே தஞ்சமென்று வந்தடைந்த
அடியர் = பக்தர்கள்
தழைத்திட = வளமுடன் வாழ
அருள் செய் = கருணை செய்வாயாக!
பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக்
காலையில் மாலையில் கருத்துடன் நாளும் (202)
பொருள்:
பாலன் = முருகப்பெருமானுடைய பிள்ளையாகிய
தேவராயன் = தேவராயன் என்னும் பெயரை உடைய அடியேன்
பகர்ந்ததை = சொல்லிய ‘கந்தர் சஷ்டி கவசம்’ என்னும் இந்தத் துதிப்பாடலை
நாளும் = தினந்தோறும்
கருத்துடன் = ‘தீமைகள் விலகி நன்மை வாய்க்கவேண்டும்’ என்னும் எண்ணத்துடன்
காலையில் = காலைப் பொழுதிலும்
மாலையில் = மாலைப்பொழுதிலும்
ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி
நேச முடன்ஒரு நினைவது வாகிக் (204)
கந்தர் சஷ்டிக் கவசம் இதனைச்
சிந்தை கலங்காது தியானிப் பவர்கள் (206)
பொருள்:
ஆசாரத்துடன் = பக்தி ஒழுக்கத்துடன்
அங்கம் = உடலை
துலக்கி = தூய்மைபடுத்திக் கொண்டு
நேசமுடன் = அன்புடன்
ஒரு = ஒரே
நினைவது ஆகி = நினைப்போடு
கந்தர் சஷ்டி கவசம் = கந்தக் கடவுளின் சஷ்டி கவச துதி ஆகிய
இதனை = இந்த நூலை
சிந்தை = மனம்
கலங்காது = கலக்கமடையாமல்
நாளும் = நாள்தோறும்
தியானிப்பவர்கள் = மனத்தால் துதிப்பவர்கள்
ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு
ஓதியே ஜெபித்து உகந்துநீ றணிய (208)
பொருள்:
ஒரு நாள் = ஒரு தினத்திற்கு
முப்பத்தாறு உருக் கொண்டு = முப்பத்தாறு முறை முருகனின் திருநாமங்களை
ஓதி = கூறி
செபித்து = ஜெபம் செய்து
உகந்து = மகிழ்ச்சியுடன்
நீறு அணிய = விபூதியைத் தரித்துக் குமரக்கடவுளை வணங்கித் துதித்தால்
அஷ்டதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த்
திசைமன்ன ரெண்மர் செயல(து) அருளுவர் (210)
பொருள்:
அஷ்டதிக்கு உள்ளோர் = உலகத்திலே எட்டுத் திசையிலும் உள்ளவர்கள்
அடங்கலும் = அனைவரும்
வசமாய் = தனக்கு வசப்படுவார்கள்;
திசை மன்னர் = திசைகள் எட்டிற்கும் தலைவர்களாகிய தேவர்கள்
எண்மர் = எட்டு பேரும்
செயலது அருளுவர் = தங்கள் அருளைப் பொழியும் நலன்களைத் தருவார்கள்;
மாற்றல ரல்லாம் வந்து வணங்குவர்;
நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும் (212)
பொருள்:
மாற்றலர் எல்லாம் = எதிரிகள் எல்லாம்
வந்து = தாமே வலிய வந்து
வணங்குவர் = பணிந்து எழுவார்கள்;
நவகோள் = நவ கிரகங்களும்
மகிழ்ந்து = சந்தோஷம் கொண்டு
நன்மை அளித்திடும் = நன்மைகளைத் தரும்;
நவமத னெனவும் நல்லெழில் பெறுவர்;
எந்த நாளும்ஈ ரெட்டாய் வாழ்வார் (214)
பொருள்:
நவம் = புதுப்பொலிவுடன்
மதன் எனவும் = மன்மதன் என்று புகழும் அளவிற்கு
நல் எழில் = சிறந்த அழகை
பெறுவர் = பெறுவார்கள்;
எந்த நாளும் = எப்பொழுதும்
ஈரெட்டா = பதினாறு வயது உடையவர்களாகி
வாழ்வர் = வாழ்ந்திருப்பார்கள்;
கந்தர்கை வேலாம் கவசத் தடியை
வழியாய்க் காண மெய்யாய் விளங்கும் (216)
பொருள்:
கந்தர் கை வேலாம் = முருகர் கையில் இருக்கும் வேலைப் போன்ற
கவசத்து அடியை = இந்தக் கவசத்தில் இருக்கும் பாட்டின் அடியை
வழியாய்க் காண = முறைப்படி கருத்துடன் கவனித்துப் பார்க்க
மெய்யாய் விளங்கும் = உண்மையின் வடிவாக முருகப்பிரான் வந்து தோன்றுவார்
விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்;
பொல்லா தவரைப் பொடிபொடி யாக்கும் (218)
பொருள்:
விழியால் காண = கண்களால் பார்த்தவுடனே
பேய்கள் வெருண்டிடும் = பேய்கள் பயந்து ஓடிவிடும்;
பொல்லாதவரை = எதிரிகளை
பொடி பொடி = துகள் துகளாக
ஆக்கும் = ஆக்கி, அவர்களின் ஆற்றலை அழித்துவிடும்.
நல்லோர் நினைவில் நடனம் புரியும்
சர்வ சத்துரு சங்கா ரத்தடி (220)
பொருள்:
அடி = ‘கந்தர் சஷ்டி கவசம்’ என்னும் இந்தப் பாட்டின் அடிகள்
நல்லோர் = நல்லவர்களுடைய
நினைவில் = எண்ணத்தில்
நடனம் = ஆனந்தக் கூத்து
புரியும் = செய்யும்;
சர்வ சத்துரு = எல்லாப் பகைவர்களையும்
சங்காரத்து = சம்ஹாரம் செய்யும்
அடி = அடிகளாகவும் விளங்கும்.
அறிந்தென துள்ளம் அஷ்டலட் சுமிகளில்
வீரலட் சுமிக்கு விருந்துண வாக (222)
பொருள்:
அறிந்து = மெய்ம்மையை உணார்ந்து தெளிந்த
எனது உள்ளம் = என்னுடைய மனம்
அஷ்டலட்சுமிகளில் = எட்டுவகை இலக்குமிகளில்
வீரலட்சுமிக்கு = வெற்றியைத் தரும் வீர லட்சுமிக்கு
விருந்து = புதுமையான
உணவாக = உணவாகும்படி (வீர லட்சுமி என் மனத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்குமாறு)
சூரபத் மாவைத் துணித்தகை யதனால்
இருபத் தேழ்வர்க் குவந்தமு தளித்த (224)
பொருள்:
சூர பத்மாவை = சூர பத்மனை
துணித்த = வதைத்த
கை அதனால் = திருக்கையால்
இருபத்து ஏழ்வர்க்கு = இருபத்தேழு பேர்க்கு
உவந்து = மகிழுமாறு
அமுது அளித்த = தேவாமிருதத்தை வழங்கி அருள்செய்த
குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும்
சின்னக் குழந்தை சேவடி போற்ற (226)
பொருள்:
குருபரன் = சிவபெருமானுக்கு குருவாகி நின்று உபதேசித்த கந்தபிரானை
பழநிக் குன்றினில் = பழநி மலையில்
இருக்கும் = எழுந்தருளி இருக்கும்
சின்னக் குழந்தை = சிறிய பாலகனின் திருவுருவில் விளங்கும் முருகக்கடவுளின்
சேவடி போற்ற = சிவந்த பாதங்களைத் துதிக்க
எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம்
மேவிய வடிவுறும் வேலவ! போற்றி! (228)
பொருள்:
எனை = என்னை
தடுத்து ஆள் கொள்ள = தகாத வழியில் போகாமல் தடுத்து ஆட்கொள்ளும்படி
என் தனது உள்ளம் = அடியேனுடைய மனத்தில்
மேவிய = எழுந்தருளி இருக்கும்
வடிவு உறும் = அழகிய
வேலவ = வேலாயுதபாணியே!
போற்றி = உனக்கு நமஸ்காரம்!
தேவர்கள் சேனா பதியே! போற்றி!
குறமகள் மனமகிழ் கோவே! போற்றி! (230)
பொருள்:
தேவர்கள் = தேவர்களின்
சேனாபதியே = படைத்தலைவனே!
போற்றி = உன்னைத் துதிக்கிறேன்!
குறமகள் = குறக்குலத்தில் வளர்ந்த வள்ளியம்மையாரின்
மனம் மகிழ் = திருவுள்ளத்தை மகிழ்விக்கின்ற
கோவே = அரசனே!
போற்றி = உன்னை வணங்குகிறேன்!
திறமிகு திவ்விய தேகா! போற்றி!
இடும்பா யுதனே! இடும்பா! போற்றி! (232)
பொருள்:
திறம் மிகு = வலிமை மிகுந்த
திவ்விய = தெய்வீகப் பொலிவு பொருந்திய
தேகா = திருமேனி உடையவனே!
போற்றி = உன்னை வணங்குகிறேன்!
இடும்ப = (தீயவர்களுக்குத்) துன்பத்தைக் கொடுக்கும்
ஆயுதனே = வேலாயுதத்தை உடையவனே!
இடும்பா = (அவ்வேலாயுதத்தைக் கொண்டு) பகைவர்களுக்கு துன்பம் செய்கின்றவனே!
போற்றி = உம்மைத் துகிக்கின்றேன்!
கடம்பா! போற்றி; கந்தா! போற்றி!
வெட்சி புனையும் வேளே! போற்றி! (234)
பொருள்:
கடம்பா போற்றி = கடம்பமலர் மாலையைத் தரித்தவனே, உன்னை வணங்குகிறேன்!
கந்தா போற்றி = கந்தக் கடவுளே! உன்னை வணங்குகிறேன்!
வெட்சி = வெட்சி மலரால் செய்யப்பட்ட மாலையை
புனையும் = அணிந்துகொள்கின்ற
வேளே = கந்தவேளே!
போற்றி = உன்னை வணங்குகிறேன்!
உயர்கிரி கனக சபைக்கோ ரரசே!
மயில்நட மிடுவோய்! மலரடி சரணம்! (236)
பொருள்:
உயர் = உயர்ந்து விளங்கும்
கிரி = கந்தகிரியில் இருக்கும்
கனகம் = பொன்னால் ஆன
சபைக்கு = சபாமண்டபத்துக்கு
ஓர் = ஒப்பற்ற
அரசே = நாயகனே
மயில் = மயில் வாகனத்தில் வந்து
நடம் இடுவோய் = நடனம் புரிபவனே
மலர் அடி = உனது தாமரை மலர் போன்ற திருவடிகள்
சரணம் = எனக்குத் தஞ்சமாம்.
சரணம் சரணம் சரஹண பவஓம்!
சரணம் சரணம் சண்முகா! சரணம்! (238)
பொருள்:
சரவண பவ ஓம் = சரவணபவஓம் என்னும் மந்திரத்தின் பொருளே
சண்முகா = ஆறு முகங்களைக் கொண்டு அருள்பாலிப்பவனே!
சரணம் சரணம் சரணம் சரணம் = உனக்கு நமஸ்காரங்கள்!
0.050409196 seconds